தினமலர் 06.05.2013
“தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்’ நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
தாம்பரம்:”தாம்பரம் நகராட்சி உருவாகி, 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து, தாம்பரத்தை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்’ என்று, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.தாம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர், கரிகாலன் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில், கமிஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:தற்போது, தாம்பரம் நகராட்சி, 49 ஆண்டுகளை கடந்து, 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நகராட்சியின் பரப்பளவு 20.72 சதுர கி.மீ., தற்போதைய மக்கள் தொகை 1,73,051.நகராட்சியின் சாதாரண வருவாய் 44.52 கோடி ரூபாய். மூலதன வருமானம் 126.77 கோடி ரூபாய். இதனால், தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கான அனைத்து தகுதியும் உள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, “மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, நகராட்சி தலைவர் கரிகாலன் பதிலளித்தார்.