தினமலர் 15.05.2013
பள்ளிக்கரணையில் விதிமீறல் கட்டடத்துக்கு “சீல்’
சென்னை:சென்னை பள்ளிக்கரணை பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட நான்கு மாடி வணிக கட்டடத்துக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள் நேற்று, “சீல்’ வைத்தனர்.சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில், வி.ஜி.பி., ராஜேஷ் நகரில் மனை எண்: 6ல் உள்ள நிலத்தில், அச்சகம், புத்தகம் பைண்டிங், அச்சு தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் கட்ட, 2011ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது.
ஆனால், இதற்கு மாறாக, மூன்று மற்றும் நான்காவது தளங்கள் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது. இந்த பணிகளை நிறுத்த, கடந்த மார்ச், 15ம் தேதி அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.அதன் பின்னும், கட்டுமான பணிகள் நடந்ததால், கூடுதல் தளங்களை இடிப்பதற்கான நோட்டீஸ், கடந்த மாதம், 4ம் தேதி அளிக்கப்பட்டது.இதற்கும், அந்த உரிமையாளரிடம் இருந்து, எந்த பதிலும் வராத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடத்தில், கூடுதலாக கட்டப்பட்ட மூன்று மற்றும் நான்காவது தளங்களுக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று “சீல்’ வைத்தனர்.