அப்பாடா… “நகருது’ பழக்கடைகள் நெரிசலுக்கு விடிவு கிடைத்தது
மதுரை:மதுரையில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான பழக்கடைகளை, சென்ட்ரல் மார்க்கெட் எதிரே இடம் மாற்றம் செய்ய உள்ளனர்.சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு, “மத்திய காய்,கனிகள் விற்பனை அங்காடி’ என்ற பெயர் உண்டு. ஆனால், காய்கறிகள் மட்டுமே விற்கப்படுகிறது. பழ விற்பனை, யானைக்கல் பகுதியில் நடக்கிறது. ரோட்டோர பழக்கடைகளால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
நெரிசலும், நாளுக்கு நாள், அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காண, சென்ட்ரல் மார்க்கெட் செல்ல வியாபாரிகள் முன்வந்த நிலையில், அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.இந்நிலையில், வியாபாரிகள் இடமாற தொடர்ந்து ஆர்வம் காட்டினர். இதைதொடர்ந்து, சென்ட்ரல் மார்க்கெட் வடக்கிலும், விறகு மண்டிக்கு கிழக்கிலும், அண்ணாநகர் ரோட்டிற்கு மேற்கிலும், மேலூர் ரோட்டிற்கு தெற்கிலும் பழக்கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் ஒப்புதலுக்கு பின், அங்கு கடைகள் கட்டும் பணி தொடங்கும். இதே போல், வெங்காய மண்டி, தயிர் மண்டிகளையும், சென்ட்ரல் மார்க்கெட் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய, மாநகராட்சி முன்வரவேண்டும்.