“சாலைகளில் அலங்கார வளைவுகள் அமைக்க அனுமதி தேவை
சாலைகளின் குறுக்கே தாற்காலிக அலங்கார வளைவு வைக்க முறையான அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப விழாக்கள், மதம் சம்மந்தமான விழாக்கள், கூட்டங்கள் கல்லூரி விழாக்கள் ஆகிய நிகழ்வுகளின்போது தாற்காலிக அலங்கார வளைவுகளை சாலைகளின் குறுக்கே வைப்பது பிரபலமாக உள்ளது.
இத்தகைய அலங்கார வளைவுகளை அமைப்பதால் பல்வேறு சமயங்களில் சட்டம், ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் தாற்காலிக அலங்கார வளைவு வைக்க அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறியது: தாற்காலிக அலங்கார வளைவு வைக்கக் கோரும் சாலை உள்ளாட்சிக்குச் சொந்தமானது எனில், சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயலர் அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது நகராட்சி ஆணையர் ஆகியோரது சம்மதக் கடிதத்துடனும், நெடுஞ்சாலைக்கு சொந்தமானது எனில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் ஆகியோரது சம்மத கடிதத்துடனும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையுடன், சம்மந்தப்பட்ட டிஎஸ்பிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்றார்.