அடுக்குமாடிகளுக்கு “சீல்’

மதுரை:மதுரையில், உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெறாத கட்டடங்களுக்கு, கலெக்டரின் “சீல்’ வைக்கும் நடவடிக்கை தொடர்கிறது.
மதுரையில் அனுமதி பெறாமல், விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்டப்படும் சில வணிகவளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சமீபத்தில் “சீல்’ வைக்கப்பட்டது. சம்பக்குளத்தில், காதர்முத்து என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், 6 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி அனுமதி வாங்கியவர்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக உள்ள நிலையில், உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறவில்லை.
மேலும், தேவையான இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விதிமுறை மீறி கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி, கலெக்டர் நேற்று “சீல்’ வைத்தார். இதேபோல், எல்லீஸ்நகரில் ஒய்.டபிள்யூ. சி.ஏ., அமைப்பின் அடுக்குமாடி கட்டடத்திற்கும் “சீல்’ வைக்கப்பட்டது. ஆறு மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்திற்கும், மாநகராட்சி அனுமதி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.