புதிய கட்டடங்களில் “மழைநீர் சேகரிப்பு’ இல்லை
புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுவதில்லை என வேலூர் மாமன்றத்தின் சாதாரணக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
இக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பா. கார்த்தியாயினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:
ராஜா: கட்டடம் கட்ட உரிய அனுமதி பெறப்பட்டு புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதேயில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகம்: மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சீனிவாசகாந்தி: வேலூரில் மாநகராட்சி சார்பில் நீச்சல்குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை மேயர் வி.டி. தர்மலிங்கம்: வேலூர் மாநகருக்கு அன்றாடம் வந்து செல்வோருக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும். 3-வது மண்டலம் சர்பனாமேடில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுகுமார், முருகன் : அல்லாபுரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியிலிருந்து தொரப்பாடிக்கு விநியோகம் செய்யப்படவேண்டிய குடிநீர் சரிவர வருவதேயில்லை. அல்லாபுரம் பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து 3 மாதம் ஆகிறது. இதனால் 49, 50-வது வார்டு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்களே எங்கள் பகுதிக்கு தண்ணீரை திருப்பிவிட்டுக் கொள்வோம்.
முஹம்மத் அனீப்: எங்கள் வார்டில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதனால் ஏற்கெனவே பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த புகார்கள் தொடர்பாக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பா.கார்த்தியாயினி உறுதியளித்தார்.
ஆணையர் ஜானகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.