கட்டடத்திற்கும் “சீல்’விதிமீறல் கட்டடத்தின் மாநகராட்சி வரைபட வரைவாளர் உரிமம் ரத்து
மதுரை:மதுரையில், விதிமீறல் கட்டடத்திற்கு வரைபடம் வரைந்த மாநகராட்சி வரைவாளரின் உரிமத்தை ரத்து செய்த மாநகராட்சி, சம்மந்தப்பட்ட கட்டடத்திற்கும் “சீல்’ வைத்தது. மதுரையின் விதிமீறல் கட்டடங்களுக்கு, உரிமையாளர்களை போலவே, அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. பெரும்பாலான கட்டடங்கள், “உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறாதவை,’ என்பது தான், குற்றச்சாட்டு.
“அனுமதி பெறவில்லை என்பதை விட, அந்த அனுமதியை, மாநகராட்சியே முறைகேடாக வழங்கியது,’ என்பது, குற்றச்சாட்டில் மறைந்திருக்கும் உண்மை. இதுவரை கட்டட உரிமையாளர்கள் மீது மட்டுமே பாய்ந்து வந்த நடவடிக்கை, முதன்முறையாக, அதற்கு துணை போனவர்கள் மீதும், பாயத்தொடங்கியுள்ளது. மதுரை ஸ்காட்ரோடு அழகுநாதன் மற்றும் இருவருக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, தரைகீழ் தளம், தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் கட்ட, 27 ஆயிரத்து 338 சதுர அடியில், மாநகராட்சி, அனுமதி வழங்கியுள்ளது.
2010 ஜன.,9க்கு பின், புதுப்பிக்கவில்லை. பெற்ற அனுமதியை விட, 46 அடி உயரத்திற்கு கட்டியிருந்தனர். இதைத்தொடர்ந்து, கமிஷனர் நந்தகோபால், நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி கமிஷனர் தேவதாஸ், உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் ஆகியோர், சம்மந்தப்பட்ட கட்டடத்திற்கு, நேற்று “சீல்’ வைத்தனர்.