தினமணி 04.03.2010
குடிநீர் வடிகால் வாரியம் வசூலிக்கும் “சென்டேஜ்‘ தொகை திடீர் குறைப்பு
மதுரை, மார்ச் 3: குடிநீர்த் திட்டப் பணிகளை நிறைவேற்றும் போது குடிநீர் வடிகால் வாரியத்தால் வசூலிக்கப்படும் சென்டேஜ் (நிர்வாகச் செலவுகக்கான) தொகை 5 சதமாக குறைக்கப்பட்டுள்ளதால் பொறியாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு கமிட்டிகளின் பரிந்துரைப்படி, மாநிலங்களில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைத் திட்டமிடுதல், வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில், மாநில அளவில் ஒரு தன்னாட்சி மற்றும் சுயசார்புத் தன்மையுடைய அமைப்பை உருவாக்கும் நோக்குடன், தமிழகத்தில் 1971}ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பின் செயல்பாடுகளை வரையறுக்க தனிச் சட்டமும் உருவாக்கப்பட்டது. இது ஒரு பொதுத் துறை நிறுவனம் மட்டுமின்றி, தொழில் நிறுவனமும்கூட. இதில், தலைமைப் பொறியாளர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இந்த வாரியத்தின் நிர்வாகச் செலவுக்காக (சென்டேஜ்) அதாவது, பணியாளர்கள் சம்பளம், அகவிலைப் படி, ஓய்வூதியம் உள்ளிட்ட செலவினங்களுக்காக இந்த வாரியம் மேற்கொள்ளும் திட்டங்களின் மதிப்பீட்டைப் பொருத்து திட்ட மதிப்பீட்டில் 18.5 சதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த 18.5 சதம் சென்டேஜ் தொகையில் திட்டங்களை செயல்படுத்துவோரின் நிர்வாகச் செலவுக்கு 10 சதம், ஓய்வூதியத்துக்காக 1.5 சதம், திட்ட மதிப்பீடு தயாரித்தலுக்காக 2.5 சதம், தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் சரிபார்க்க 0.5 சதம், தணிக்கை மற்றும் கணக்கு ஆகியவற்றுக்காக 1.0 சதம் என பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த சென்டேஜ் தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு, நடப்பாண்டில் (2010) 5 சதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அகவிலைப் படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி இந்த நடவடிக்கையால் பாதிக்கும் என, தொழிற்சங்கங்கள் கருத்துக் கூறி, எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் பாதாளச் சாக்கடை வாரியப் பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே.கே.என். ராஜன் கூறியது:
உள்ளாட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் கட்டணமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வரவேண்டிய சுமார் ரூ.300 கோடி நிலுவை உள்ளதை வசூலிக்க வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்டேஜ் தொகை பல்வேறு கட்டங்களாகக் குறைக்கப்பட்டு தற்போது 5 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாரியத்துக்கு சுமார் ரூ.1,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதுதவிர, ஆண்டுக்கு தொடர் வருவாய் இழப்பாக சுமார் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும். இதனால், பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.
எனவே, குடிநீர் வாரியத்தைப் பலப்படுத்த சென்டேஜ் தொகையை உயர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.