தினமணி 28.06.2013
தினமணி 28.06.2013
தெற்கு தில்லி மாநகராட்சியில் “பருவமழை அவசரகாலத் திட்டம்’
தெற்கு தில்லி மாநகராட்சியில் பருவமழையால் ஏற்படும்
வெள்ளபாதிப்பு தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில்
அவசரகாலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பருவமழையை முன்னிட்டு தெற்கு தில்லி மாநகராட்சி மேற்கொண்டுள்ள
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய “பருவமழை அவசரகாலத் திட்டம் -2013′
என்ற கையேட்டை வியாழக்கிழமை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் மாநகராட்சி
அவைத் தலைவர் சுபாஷ் ஆர்யா கூறியது:
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம், மரம் விழுதல், கழிவுநீர்க் கால்வாய்
அடைப்பு உள்ளிட்டவை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சியின் நான்கு
மண்டலங்களிலும் புதிதாக உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான விவரங்கள் தெற்கு தில்லி மாநகராட்சியின் இணையதளத்திலும், இக்கையேட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் முக்கிய கட்டுப்பாட்டு
அறையின் தொலைபேசி எண்கள், தெற்கு தில்லி மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள
அதிகாரிகளின் எண்கள் ஆகியவற்றை கையேட்டில் அறிந்து கொள்ள முடியும்.
மழைக்காலங்களில் சாலை, தெருக்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, வெள்ளம்
ஏற்படும் பகுதிகளில் கூடுதலாக “பம்ப் செட்டுகள்’ நிறுவப்படும்.
தாற்காலிக வெள்ள நீர் வெளியேற்றும் நிலையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும்.
வெள்ள நீரை வெளியேற்ற தற்போது தெற்கு தில்லி மாநகராட்சியெங்கும் 20
மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார் சுபாஷ் ஆர்யா.