தினமணி 02.07.2013
தினமணி 02.07.2013
“திங்கள்தோறும் மக்களைத்தேடி மாநகராட்சி முகாம்
மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும்
திங்கள்தோறும் சுழற்சி முறையில் மக்களைத்தேடி மாநகராட்சி முகாம்
நடத்தப்படும், என ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.
மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஆர்.நந்தகோபால் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் மண்டல
அளவில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மூலம், பிறப்பு இறப்பு
சான்றுகள், கட்டட வரைபட அனுமதி, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை, வரி
விதிப்பு போன்றவை குறித்து உடனுக்குடன் தீர்வு காணப்படும். இனி, ஒவ்வொரு
திங்கள்கிழமையும், ஒவ்வொரு மண்டலத்திலும் சுழற்சி முறையில் மக்களைத் தேடி
மாநகராட்சி முகாம் நடத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பேசுகையில்,
மாநகரில் முடங்கிக் கிடந்த பாதாளச் சாக்கடை திட்டத்தை தற்போது முதல்வரின்
சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தி வருகிறோம்.
கல்வித் துறையில் தமிழகத்திலுள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு மதுரை
மாநகராட்சி பள்ளிகள் முன்னோடியாக திகழ்கின்றன. சுமார் 20 ஆண்டுகளாக
பராமரிக்கப்படாமலிருந்த மாநகராட்சி மருத்துவமனைகளை சீர்படுத்தி, நவீன
கருவிகள் அமைத்து வருகிறோம். முதல்வர் உத்தரவின்பேரில் 300
வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில்
அனைத்து பிரிவுகளிலும் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
முந்தைய 72 வார்டு பகுதியிலுள்ள சாலைகளில் 90 சதவீதம்
மேம்படுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே மேலும் 2 உயர்மட்டப்
பாலங்கள் கட்டப்பட உள்ளன.
குடிநீர், கழிவுநீர்ப் பிரச்னை உள்ளிட்ட எந்த அடிப்படை பிரச்னைகள்
குறித்தும், பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம், என்றார்.
முன்னதாக, மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து வரவேற்றார். உதவி ஆணையர்
அ.தேவதாஸ் நன்றி கூறினார். துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், நகர் பொறியாளர்
(பொறுப்பு) அ.மதுரம், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், நகர்நல
அலுவலர் யசோதாமணி, மண்டல வருவாய் ஆய்வாளர் ப.சுரேஷ்குமார், சுகாதாரக்குழு
தலைவர் முனியாண்டி, தெற்கு மண்டலக் கண்காணிப்பாளர் வரலட்சுமி, பொறியாளர்கள்
ராசேந்திரன், சேகர், மாமன்ற உறுப்பினர்கள் பூமிபாலகன், முத்துக்குமார்,
கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.