பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கும்துப்புரவு பணியாளருக்கு “பரிசு’
திருச்சி: “மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அதிகளவில் சேகரிக்கும் துப்புரவுப் பணியாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்’ என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, 2,500 தெருக்களிலிருந்து, 2,000 துப்புரவுப்பணியாளர் மூலம், நாள்தோறும், 410 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இக்குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து, மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை விற்பனைப் பொருளாக மாற்றிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆரம்ப நிலையிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து பெற மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்கிறது.
இதற்காக, துப்புரவுப்பணியாளருக்கான சிறப்பு பயிற்சி முகாம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தது.கூட்டத்தில் கமிஷனர் தண்டபாணி தெரிவித்ததாவது:
மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தரம் பிரித்து, அரியமங்கலம் கோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிலும், கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் வாமடம் பகுதியிலும், பொன்மலை கோட்டத்தில் பறவைகள் சாலையிலும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அம்பேத்கர் நகரிலும் உலர் வளமையத்தில் சேகரிக்கப்படுகிறது.
தூய்மையான தெரு, தூய்மையான நகரம் என்ற புதுமொழிக்கேற்ப, மாநகராட்சிப்பகுதியில் உள்ள, 160 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, 200 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் குப்பைத்தொட்டி வழங்கப்பட உள்ளன.இந்த குப்பைத்தொட்டிகளில் சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகள் ஆரம்ப நிலையிலேயே பிரிக்கப்பட்டு, தனித்தனியாக மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்களால் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படும்.மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலேயே பிரிப்பதற்கு மக்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப்பணியாளருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், நகர் நல அலுவலர் (பொ) அல்லி, ஏ.சி.க்கள் தயாநிதி, தனபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.