தினமணி 31.07.2013
தினமணி 31.07.2013
“நவீன கழிப்பறை வசதியுடன் ஆம்னி பஸ் நிலையம்’
மாட்டுத்தாவணியில் நவீன கழிப்பறை வசதியுடன்
அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையப் பணிகளை, ஆகஸ்ட் மாத இறுதிக்குள்
முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால்
தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
மதுரை மாநகர் மையப்பகுதி மற்றும் பெரியார் பஸ் நிலையப் பகுதியில் ஆம்னி
பஸ்களால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில்,
மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாட்டுத்தாவணி இருசக்கர வாகனக் காப்பகம் அருகில் உள்ள காலி இடத்தில்
நடைபெற்றுவரும் ஆம்னி பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, பஸ்கள்
நிறுத்துவதற்கான பஸ் பே மற்றும் ஆம்னி பஸ் நிறுவனத்தினருக்கான அலுவலகம்
அமைக்கப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை முதல் பஸ் நிலைய மேற்கூரை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
ரூ. 2.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பஸ் நிலையத்தில் விமான
நிலையத்தில் உள்ளது போல நவீன கழிப்பறை கட்டப்பட உள்ளது. அத்துடன், இலவச
கழிப்பறையும் கட்டப்படும்.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு ஆம்னி பஸ் நிலையம் தயாராகி விடும்.
இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், பெரியார் பஸ் நிலையம்,
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட மாநகரப் பகுதிக்குள் செயல்படும் அனைத்து
ஆம்னி பஸ் அலுவலகங்களும் மாட்டுத்தாவணிக்கு உடனடியாக இடமாற்றம்
செய்யப்படும்.
அதன்பிறகு, எந்த ஆம்னி பஸ் அலுவலகமும் மாநகருக்குள் செயல்பட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இதன்மூலம், ஆம்னி பஸ்களால் மாநகருக்குள் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும், என்றார்.