தினமணி 10.08.2009
மாநகராட்சிப் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு “டிப்ஸ்‘ தர வேண்டாம்: ஐஒசி முதுநிலை வட்டார மேலாளர்
திருநெல்வேலி, ஆக. 9: மாநகராட்சி பகுதிக்குள், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வருபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் தனியாக பணம் கொடுக்க வேண்டாம் என, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முதுநிலை வட்டார மேலாளர் டி. முரளி தெரிவித்தார்.
பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் “இன்டேன்‘ வாடிக்கையாளர் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை கையாளும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதுநிலை வட்டார மேலாளர் முரளி பேசியதாவது: நிகழாண்டில் கடந்த 3 மாதங்களில் ஐஒசி ரூ. 330 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மொத்தம் 5 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் மொத்த எடை 14.2 கிலோ. வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது எடையை சரிபார்த்து வாங்க வேண்டும். சிலிண்டர் எடுத்து வருபவர்களிடம் எடை அளவு இயந்திரங்கள் உள்ளன.
சிலிண்டருக்கு பணம் கொடுத்த ரசீதை கேட்டு வாங்க வேண்டும்.
கையெழுத்திட்டு வாங்கும்போது தேதியை குறிப்பிட வேண்டும். சிலிண்டர் எடுத்து வருபவர் அதனை உங்கள் முன்னாலே சோதனை செய்து பொருத்துவார். மாநகராட்சிப் பகுதிக்குள் இருந்தால், அவருக்கு நீங்கள் தனியாக பணம் கொடுக்க வேண்டாம்.
மாநகராட்சிக்கு வெளியே இருந்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும்.
வீட்டு உபயோக சிலிண்டருக்கு அரசு மானியம் அளிக்கிறது. அதனால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வர்த்தக நிறுவனங்களிலோ, கார்களுக்கோ பயன்படுத்தக்கூடாது.
15 நாள்களுக்குள் புதிய இணைப்பு
புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 15 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். இரண்டு சிலிண்டர் கேட்டால் அதுவும் உடனடியாகத் தரப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு இப்போது இல்லை. சிலிண்டர் வாங்கும்போது அடுப்பு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட அடுப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஊழியர்கள் வீட்டுக்கு வந்து அடுப்பைச் சோதனையிடுவார்கள். அடுப்பு தரமானதாக இருந்தால் புதிய இணைப்பு வழங்கப்படும்.
எரிவாயு செல்லும் குழாய் தரமானதாக இருக்க வேண்டும். இப்போது ஸ்டீல் வயரால் பின்னப்பட்ட குழாய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குழாயை மாற்ற வேண்டும்.
எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தினால் சராசரி ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 முதல் 8 சிலிண்டர்வரைதான் ஆகும். பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தால் 12 சிலிண்டர்கள் வரை ஆகலாம் என்றார் அவர்.
தமிழ்நாடு, புதுவை நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜி. வெங்கடாசலம், ஐஒசி திருநெல்வேலி உதவி மேலாளர் கே. பிரேமா, மதுரை ஐஒசி துணை மேலாளர் ஆரியன், திருநெல்வேலி சுந்தர் கேஸ் பங்குதாரர்கள் ஜி. நடராஜசுந்தரம், எஸ். நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.