“குளோரினேஷன்’ கருவி மூலம் குடிநீர் லாரிகளில் பரிசோதனை பாதுகாப்பான நீரை வழங்க அறிவுரை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில், தனியார் குடிநீர் லாரிகளில் வினியோகிக்கப்படும், தண்ணீர், “குளோரினேசன்’ செய்யப்பட்டுள்ளதா? என்பதை, உரிய கருவி மூலம் சோதித்த பின்னரே வழங்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
மழை காலம் துவங்கியபின் கொசு மற்றும் தண்ணீரால் பல நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சுகாதாரமற்ற குடிநீரால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும். இதை தடுக்கும் வகையில், நகராட்சி சார்பில் தனியார் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளில் “குளோரினேசன் டெஸ்டர்’ மூலம் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் வீடுகளில் கிணறு, தொட்டிகளில் தேக்கப்படும் தண்ணீரும் பாதுகாப்பாக உள்ளதா? என, பரிசோதித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சுகாதார அலுவலர் சந்திரன் கூறியதாவது: குடிநீர் லாரிகளில் சாதாரணமாக “0.2 பார்ட்ஸ் பெர்’ மி.லி., அளவில் குளோரினேசன் செய்திருக்க வேண்டும். சில நேரங்களில் அளவு தெரியாமல் 2.0 அளவில் கலந்த தண்ணீரை குடிக்கும்போது, உதடு வெந்துவிடும். எனவே, எந்தளவு “குளோரினேசன்’ செய்துள்ளனர் என்பதை, அவர்கள் கொண்டு வரும் தண்ணீரை, “குளோரினேசன் டெஸ்டர்’ கருவி மூலம் பரிசோதித்து, எத்தனை சதவீதம் உள்ளது என்பதை அறிந்து கொள்வோம். அதிகமாக இருந்தாலும் அல்லது, “குளோரினேசன்’ இல்லாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.