தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
பேரூர் பேரூராட்சியில் “குப்பைக்கு தங்கம்’ திட்டத்தின் கீழ் பரிசு
பேரூர் பேரூராட்சியில் “குப்பைக்கு தங்கம்’ திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பேரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆகஸ்ட்
8-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதி வரை “குப்பைக்கு தங்கம்’ என்ற திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் உள்ள 2,200 வீடுகளில்
ஒரு வார காலத்திற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ்
மட்கும் குப்பை, மட்காத குப்பை ஆகியவற்றை பொதுமக்களே தரம் பிரித்து வழங்க
வேண்டும். இதனை பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தினமும் வீடு வீடாக
சென்று சேகரித்து வந்தனர்.
இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, கண்காணிக்கும் பொறுப்பு தன்னார்வ
அமைப்புகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பேரூராட்சியின் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியது:
குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையாக குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பை இல்லாத சுற்றுச்சூழலை
உருவாக்கவே குப்பைக்கு தங்கம் என்ற திட்டம் பேரூராட்சியால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. மேலும்
குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு தனியார் அமைப்புகளின்
பங்களிப்புடன் தங்கம், வெள்ளி நாணயம், பட்டுப் புடவை உள்ளிட்ட பரிசுத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வார்டிலும் தலா பத்து பேரை தேர்ந்தெடுத்து பேரூராட்சி
தலைவர் லட்சுமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழச்சியின் போது
பரிசுகள் வழங்கப்பட்டன என்றார்.