தினமணி 16.03.2010
மாநகராட்சிப் பள்ளிகள் இனி “சென்னை பள்ளிகள்‘
சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் இனி “சென்னை பள்ளிகள்‘ என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.
சென்னை மாநகரட்சியில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2010}2011}ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:
மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் “சென்னை மாநகராட்சிப் பள்ளி‘ என்ற பெயர் “சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி‘ என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் மண்டலத்துக்கு ஒன்று வீதம், 10 ஆற்றல்சார் பள்ளிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 67 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நூலகங்களில் அறிவியல், பொது அறிவு, இலக்கியம், மேலாண்மை, பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்கள் இடம்பெற உள்ளன.
மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு தகவல் மையம் ஒன்று மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதுமட்டும் இல்லாமல் 11}ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தொழிற்சாலைகளை நேரடியாகப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இலவச வடிவயியல் உபகரணப் பெட்டிகள்: கணித பாடம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நன்கு வரைந்து தேர்ச்சி பெறும் நோக்கத்தில் 6}ம் வகுப்பு முதல் 10}ம் வகுப்பு வரை பயிலும் 61 ஆயிரம் பேருக்கு வடிவயியல் (ஜாமென்ட்ரி) பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதனுடன் பென்சில், பேனா, ரப்பர், ஷார்ப்னர் அடங்கிய பெட்டி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.
100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ்}2 வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், தொழிற் கல்வி பயில செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதுபோல், 10}ம் வகுப்பு முடித்து பட்டயப் படிப்பு பயிலச் செல்லும் மாணவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு அவசர செலவினத் தொகை: பள்ளிகளில் அன்றாட அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில், மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அவசர செலவினத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 15 ஆயிரம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் செலவின நிதியாக வழங்கப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் காது கேட்கும் திறன் மற்றும் வாய் பேசும் திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளி ஒன்ரு வடசென்னையில் அமைப்பது, மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைத்தல், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு மற்றும் மேலாண்மைப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கல்விக்கென மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டன.