தினமலர் 21.10.2013
“கட்டணம் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு’
மேட்டுப்பாளையம் : “நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி செலுத்தத் தவறினால், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்’ என, நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சியில், ஆண்டுக்குரிய குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, காலியிட வரி, கடை வாடகை ஆகியவை, இரு தவணையாக வசூல் செய்யப்படுகிறது. சிலர் முந்தைய ஆண்டுக்கு உரிய கட்டணத்தை செலுத்தாமல், நிலுவையாக வைத்துள்ளனர்.
சொத்துவரி 10. 82 லட்சம் ரூபாய், குடிநீர் கட்டணம் 26 லட்சம், காலியிட வரி 9.82 லட்சம், கடை வாடகை 11.84 லட்சம், தொழில் வரி 2.16 லட்சம் ரூபாய் நிலுவையாக உள்ளது. நகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறுகையில், “வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையாக வைத்துள்ளவர்கள், வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; தவறும் பட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும், என்றார்.