தினமணி 23.03.2010
“வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு‘
கோவை, மார்ச் 22: வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று, மழைநீர் சேகரிப்பு மைய இயக்குநர் சேகர் ராகவன் கூறினார்.
உலகத் தண்ணீர் தினத்தை ஒட்டி, இந்தியத் தொழில் வர்த்தக சபை சார்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சேகர் ராகவன் பேசியது:
உலகில் மூன்றில் இரு பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. மொத்தமுள்ள நீரில் 95 சதவீதம் உப்புநீர். மீதமுள்ள 5 சதவீதம்தான் நன்னீர். இவற்றில் ஒரு சதவீதத்தையே குடிநீராகப் பயன்படுத்த முடியும்.
ஆண்டுதோறும் குடிநீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே சமயம், குடிநீரின் இருப்பு குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 1.3 மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழைநீரை அப்படியே சேகரித்து இருந்தால், சென்னை மக்களின் குடிநீர் தேவைகளுக்கு போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், குடிநீரை சேகரிக்காமல், நாம் வீணடித்து வருகிறோம்.
ஆகாயத்தில் இருந்து கொட்டும் மழையானது தார்ச்சாலை வழியே ஓடி, சாக்கடையை அடைந்து, யாருக்குமே பயனில்லாமல், கடலில் கலக்கிறது. இந்த மழைநீரை பூமிக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்காக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வீடுதோறும் அமைக்க வேண்டும்.
கடந்த 2002}ம் ஆண்டு, தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனால், அனைத்து குடியிருப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஓராண்டுதான் இந்த விதி தீவிரமாக அமலாக்கப்பட்டது. அதற்கு பிறகு அரசின் கெடுபிடி தளர்ந்தது.
இன்று பெரும்பாலான வீடுகள் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாமலேயே கட்டப்படுகிறது. பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்துவதற்காக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் கடுமையாக அமலாக்க வேண்டும், என்றார்.