தினமணி 29.11.2013
“டெங்கு’ பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இலவச கொசுவலை
தினமணி 29.11.2013
“டெங்கு’ பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இலவச கொசுவலை
சென்னை மாநகராட்சியில் டெங்கு, மலேரியா அதிகம் பரவ
வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்க
மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் நீர்வழிப்பாதைகளின் ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 5
லட்சம் இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொசு வலைகள் கொள்முதல் செய்யும்
நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக 78,184 கொசு வலைகள் கொள்முதல்
செய்யவும், இரண்டாம் கட்டமாக 4,21,816 கொசு வலைகள் கொள்முதல் செய்யவும்
இரண்டு முறை டெண்டர்கள் கோரப்பட்டன.
இதில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து,
வலைகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி
வைத்தார். இதன் அடையாளமாக 4 பேருக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டன.
குடிசை மாற்று வாரிய பகுதிகள்: இந்த நிலையில் நீர் வழிப்பாதை ஓரங்களில்
வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில்
வசிக்கும் ஏழைகளுக்கும் கொசு வலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகள், குடிசைப் பகுதிகளில் வசிக்கும்
மக்களுக்கும் வலைகள் வழங்கப்படும். மேலும், சென்னையில் கடந்த காலங்களில்
டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் பாதித்த பகுதிகளைக்
கண்டறிந்து, அந்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கும் இலவச கொசு வலைகள்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பை
தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில்
கணக்கெடுப்பு முடிந்து கொசு வலைகள் விநியோகம் செய்யப்படும் என்று
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்போது வழங்கப்படும்: கொசு வலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர்
முறைப்படி தொடங்கி வைத்திருந்தாலும், கொசு வலைகள் விநியோகிக்கும்
நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. கொள்முதல்
செய்யப்பட்டுள்ள கொசு வலைகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இப்போது பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. கொசு வலைகளை
வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 அல்லது 5
நாள்களில், டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் கொசு வலைகள் வழங்கும் பணிகள் முழு
வீச்சில் தொடங்கப்படும். இந்த கொசு வலைகள் ரூ. 1.17 கோடி மதிப்பில்
வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கொசு வலைகள் கூடிய விரைவில் கொள்முதல்
செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.