தினமலர் 20.12.2013
கடலூரில் குழாய் உடைப்புதேவனாம்பட்டினத்திற்கு குடிநீர் “கட்’
கடலூர் :கடலூர் பாரதி சாலையில், உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர், திருவந்திபுரம் மலையில் இருந்து நகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் எதிரே, பாரதி சாலையில் நகரப் பகுதிக்கு செல்லும் மெயின் குடிநீர் குழாயில் நேற்று, திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடியது.இதையறிந்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று, ஐந்தரை அடி ஆழம் பள்ளம் தோண்டி உடைப்பு ஏற்பட்ட பைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பைப் உடைப்பு ஏற்பட்டதால், அண்ணா நகர், கே.கே.நகர், நேரு நகர், பத்மாவதி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 20ம் தேதி காலை குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.நாளை (21ம் தேதி) காலை வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.