தினமணி 31.12.2013
மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு “ஆர்.ஓ.’ குடிநீர் இயந்திரம்
சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் “ஆர். ஓ.’ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க மாநகராட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வரும் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை மாநகராட்சி சார்பில் இப்போது 86 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 93 குடும்ப நல மருத்துவமனைகளும், 12 அவசரகால பிரசவ மருத்துவமனைகளும் பராமரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முன்னிலையில் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பல மருத்துவமனைகளில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உறவினர்களும் அவதியுறுகின்றனர். இதற்காக கேன் குடிநீர் வாங்கி மருத்துவமனைகளில் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் “ஆர்.ஓ.’ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது:
இப்போது மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குடும்ப நல மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இல்லை. இதனால் நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் அவதியுற்று வருகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, 86 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 93 குடும்ப நல மருத்துவமனைகளில் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படும். இதற்கான அறிவிப்பு அடுத்த நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது.
இப்போது 12 அவசர கால பிரசவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்ளில் சிறிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. இந்த மையங்களில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து பெரிய இயந்திரங்கள் வழங்கப்படும்.
இவற்றுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் வெளியானவுடன் இயந்திரங்கள் கொள்முதல் செய்து நிறுவும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.