தினமணி 03.01.2014
பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் “சேவை தகவல் பலகை’
பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் சேவை தகவல் பலகை அமைக்கப்படுகிறது.
பெங்களூரு ஜெயநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேவை தகவல் பலகையை அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், மாநகராட்சியின் பொதுப் பணி நிலைக் குழுத் தலைவர் பசவராஜ் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பசவராஜ் கூறியது:
பெங்களூரு ஜெயநகரில் சகாலா திட்ட மாதிரியில் அனைத்துப் பிரிவுகளின் தகவல் அடங்கிய பலகை மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாநகராட்சியின் சேவைகள், அதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜெயநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முறையாக இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் 8 ம்ண்டலங்களில் உள்ள 191 மாநகராட்சி அலுவலங்களிலும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.
மின் வாரியம், குடிநீர் வாரியம். காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் இது போன்று தகவல் பலகை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்த மாநகராட்சி ஆணையரிடம் கோரப்படும்.
வார்டு எண் 198-இல் எமிகேபூர் பகுதியில் கழிப்பறை, ஆழ்துளைக் கிணறு, பேருந்து நிலையம் அமைக்கவும், சாலைகளைச் சீரமைக்கவும் ரூ. 49.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 58-இல் சி.வி.ராமன் நகரில் ரூ. 50 லட்சத்தில் கெம்பே கெüடர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.