தினமணி 27.01.2014
“வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’
பெங்களூரு மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநகராட்சியின் வார்டு அளவிலான வளர்ச்சிக் குழுத் தலைவர் பசவராஜ் தெரிவித்தார்.
பெங்களூருவில் சனிக்கிழமை பேட்டராயனபுரா, பீன்யா தாசரஹள்ளிப் பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுக்கு ஒற்றை சாளரமுறையில் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை வழங்கிய பின்னர், அவர் பேசியது:
கடந்த காலங்களில் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, ஒற்றை சாளரமுறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். மக்கள் தொகை அதிகரித்து வரும் பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் தாமதமாவதால், பொதுமக்கள் பாதிப்புள்ளாகின்றனர்.
மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு கர்நாடக அரசு ரூ. 300 கோடி விடுவித்துள்ளது. இதையடுத்து, 198 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, மாநகராட்சிக்குள்பட்ட பேட்டராயனபுரா அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் பலகையை எம்.எல்.ஏ. விஸ்வநாத், பசவராஜ் இணைந்து தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் துணைமேயர் இந்திரா, தோட்டக்கலை நிலைக்குழுத் தலைவர் முனிராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.