தினமணி 06.05.2010
கோவில்பட்டி உணவு விடுதிகளில் சுகாதார அலுவலர்கள் “திடீர்‘ ஆய்வு
கோவில்பட்டி, மே 5: கோவில்பட்டி நகராட்சிப் பகுதியிலுள்ள உணவு விடுதி மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
உணவு விடுதி மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களிலுள்ள பொருள்கள் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதா, காலாவதியான பொருள்களை விற்பனை செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் விஜயராகவன், சுகாதார அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், முத்துக்குமார் மற்றும் சுகாதார ஊழியர்கள் கோவில்பட்டி – எட்டையபுரம் சாலை, பசுவந்தனை சாலை மற்றும் பிரதான சாலையிலுள்ள உணவு விடுதி மற்றும் உணவு பொருள் விற்பனை நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் வைக்கப்பட்டுள்ள குளிர்பானம் பாட்டில்கள், தேயிலை பாக்கெட், கடலை மாவு, சேமியா, நெய் மற்றும் மஞ்சள்பொடி ஆகிய பாக்கெட்களை சோதனையிட்டபோது, தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது, எந்த தேதியும் குறிப்பிடாமல் வைக்கப்பட்டுள்ள தேயிலை, கடலை மாவு, சேமியா பாக்கெட்களை சுகாதாரத் துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
மேலும், உணவு விடுதிகளுக்குச் சென்று தயாரித்த பொருள்களை பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா, தரமான பொருள்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.பணியாளர்கள் சுத்தமாக இருக்கும்படியும் அறிவுரை வழங்கினர்.
இதுகுறித்து, சுகாதார அலுவலர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாக்கெட்டிலுள்ள பொருள்கள் எப்போது தயார் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு தேதி ஆகியவை அச்சிடப்பட்டுள்ளதா என்றும், உணவுப் பொருள்கள் முறையாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தோம். உரிமையாளர்களிடம் காலாவதியான பொருள்களை பயன்படுத்தக் கூடாதுஎன்றும், தயாரிப்பு மற்றும் முதிர்வு தேதி அல்லாத பாக்கெட் பொருள்களை விற்பனைக்கு வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது