தினமலர் 25.05.2010
குப்பைகள் நிறைந்த இடம்“பளிச்‘ : அவஸ்தை பட்ட மக்களுக்கு விடிவு
கோத்தகிரி : கோத்தகிரி பஸ் நிலையம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்திலேயே சிறப்பு நிலை அந்தஸ்தை கோத்தகிரி பேரூராட்சி பெற்றுள்ளது. ஆனால்,நகரில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை. குறிப்பாக, குப்பைகள் கொட்டுவதற்கு உகந்த இடம் இல்லாத நிலையில், நகரில் பல பகுதிகளில் சாலையோரத்திலும், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் குப்பைகள் கொட்டுவது வழக்கமாக உள்ளது. பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி காலியாக இருந்த நிலையில், மக்கள் அதிகளவில் வந்துசெல்லும் பஸ் நிலையம் பகுதியில் அன்றாட சேகரமாகும் குப்பைகள், அரசு மருத்துவமனை சாலையில் கொட்டப்பட்டது. இக்குறிப்பிட்ட சாலையில், மாதா கோயில், அரசு மாணவியர் விடுதி, பள்ளி மற்றும் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளதால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் உட்பட பொதுமக்கள் துர்நாற்றத்தில் சிரமங்களை சந்தித்துவந்தனர். இந்த குப்பைகளை அன்றாட அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், புதிய சுகாதார ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றப்பின், அவரது முதல் நடவடிக்கையாக குறிப்பிட்ட இடத்தில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் கொசு தொல்லையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. “குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தகவல் பலகையும் குறிப்பிட்ட பகுதியில் வைக்கப்பட்டது. இந்த பகுதி சுத்தமானதால்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.