தினமலர் 28.06.2010
“தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சீரமைக்க முடியாது : கூடுதல் நிர்வாக இயக்குனர்
வால்பாறை: “”தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க முடியாது,” என நகராட்சிகளின் கூடுதல் நிர்வாக இயக்குனர் வால்பாறையில் தெரிவித்தார்.வால்பாறை நகராட்சி சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடப்பணி நிறைவடைந்துள்ளது. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது.நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் துரை சந்திரசேகரன் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: டெண்டர் விடப்பட்ட பணிகள் அனைத்தும் விரைந்து செய்து முடிக்கப்படும். தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க போதிய நிதி வசதி இல்லை. எனவே நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வால்பாறையில் உள்ள அனைத்து தனியார் எஸ்டேட் ரோடுகளும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகராட்சி சார்பில் தனியார் எஸ்டேட் ரோடுகள் கண்டிப்பாக சீரமைக்க முடியாது என்றார்.ஆய்வின் போது வால்பாறை நகராட்சித்தலைவர் கணேசன், செயல்அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் உடன் இருந்தனர்.