தினமலர் 20.07.2010
மதுரையில் இனி “ஒன் சைடு பார்க்கிங் ‘போலீஸ் கமிஷனர் பேட்டி
மதுரை: “”மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, இனி ஒருபுறம் மட்டும் “பார்க்கிங்‘ வசதி கொடுக்கப்படும்,” என போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியன் கூறினார்.செம்மொழி மாநாட்டிற்காக, மனிதநேய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த 21 பேர், மதுரையில் இருந்து மூன்று சக்கர சைக்கிளில் கோவை சென்றனர். இவர்களை நேற்று போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பின் அவர் கூறியதாவது :பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செய்துள்ள போக்குவரத்து மாற்றம் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கோரிப்பாளையம் உட்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். கட்டபொம்மன் சிலை அருகேயுள்ள நகரசபை நினைவுத் தூண் மற்றும் மாநகராட்சி நினைவு தூண்களை வேறு இடத்தில் மாற்றி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன் ஆலோசிக்கப்படும். அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, இருபுறமும் “பார்க்கிங்‘ உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு இனி “ஒன் சைடு பார்க்கிங்‘ ஏற்படுத்தப்படவுள்ளது, என்றார். துணை கமிஷனர்கள் தேன்மொழி, ஜெயஸ்ரீ, உதவி கமிஷனர் குமாரவேலு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் அஷ்ரப் அலி, நிர்வாகிகள் ஜாஹீர்உசேன், ரபீக்ராஜா, சம்சுதீன் உடனிருந்தனர்.