தினமலர்
சுகாதாரத்துறை தொடர் “ரெய்டு‘
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறையினர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு ரெய்டில் நேற்றும் ஈடுபட்டனர். 12 கடைகளில் சோதனை செய்து, விதிமுறை மீறியவர்களுக்கு 11 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதித்தனர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகிக்கும் வர்த்தக நிறுவனங்களில் கடந்த இரு நாட்களாக மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் “ரெய்டு‘ நடத்தி வருகின்றனர். நகர் நல அலுவலர் ஜவஹர்லால் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, முருகன், முருகேசன், வெங்கடேஷ், தங்கவேல், மோகன்ராஜ், சாமிநாதன் உள்ளிட்ட குழுவினர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று ஆய்வு நடத்தினர்.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எட்டு டீக்கடைகள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நான்கு “டாஸ்மாக்‘ பார்களில் “ரெய்டு‘ நடந்தது. 12 கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பார்களில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 400 குடிநீர் பாக்கெட்டுகள், 150 குளிர்பானங்கள் உட்பட காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. விதிமுறையை மீறியதற்காக மொத்தம் 11 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.