தினமலர் 21.07.2010
ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டைகள்: சப்ளை மாநகரட்சி அதிகாரிகள் சோதனையில் “திடுக்‘
சேலம்: சேலம் மாநகர நகர் அலுவலர் தலைமையில் ஹோட்டல்கள், டிபன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டை சப்ளை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆட்டு இறைச்சிக் கழிவுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில், ஹோட்டல்களுக்கு அழுகிய, உடைந்த முட்டைகள் சப்ளை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று மாலை நகர்நல அலுவலர் பொற்கொடி தலைமையில் அதிகாரிகள் புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், டிபன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மினி டோர் ஆட்டோவில் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்ய வைக்கப்பட்டிருந் 30 அட்டை (ஒரு அட்டையில் 30 முட்டை) முட்டைகளை கைப்பற்றினர்.
மேலும், சேலம் மாநகருக்கு அழுகிய, உடைந்த முட்டைகளை சப்ளை செய்வதாக கூறப்படும் பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த தாமரை என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.இது குறித்து நகர் நல அலுவலர் பொற்கொடி கூறியதாவது:அழுகிய, உடைந்த முட்டைகளை சாப்பிடுவதால் வாந்தி, பேதி உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற முட்டைகளை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவற்றை சப்ளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.