தினமலர் 22.07.2010
குடிநீர் சப்ளை இல்லாவிட்டால் “விழிப்பு ஒலி‘ நெல்லை மாநகராட்சியில் விரைவில் அமல்
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் தெருக்களுக்கு குடிநீர் சப்ளை இல்லாவிட்டால் “விழிப்பு ஒலி‘ எழுப்பும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், குடிநீர் இணைப்பு இருந்தும் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டால் குடிநீர் வழங்க முடியாத இடங்களுக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வயர்லெஸ் மூலம் லாரிகள் வாயிலாக குடிநீர் சப்ளை, வினியோகத்தின் சீரான தன்மை, திட்டமிட்ட கால அளவின்படி வினியோகம், ஒதுக்கீட்டின்படியான வினியோகம், தேவைக்கேற்ப மாறுதல் வினியோகம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்கண்காணிப்பு பணியை நவீன தொழில் நுட்ப உதவியுடன் நெறிமுறைப்படுத்தும் கருவிகள் மூலம் குடிநீர் சப்ளையை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் சப்ளை தெருக்களுக்கு செல்லவில்லை எனில் “விழிப்பு ஒலி‘ எழுப்பும் எந்திரத்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.