தினமலர் 22.07.2010
பிறப்பு விகிதம் குறைக்க நாய்களுக்கு “வாஸக்டமி‘
சேலம்: சேலம் மாநகர பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய், சொறி நாய் கடியில் இருந்து பொதுமக்களை காக்க, ஆண் நாய்களை பிடித்து, “வாஸக்டமி‘ அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி கடித்து வருகின்றன. பிடிபடும் நாய்களை விஷ ஊசி போட்டு கொல்வதற்கு, “புளு கிராஸ்‘ அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநகராட்சி நிர்வாகம் அதை கைவிட்டு, பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்தது. பெண் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்தால், அந்த நாய்களை 15 நாட்கள் வரை கால்நடை மருத்துவமனையில் வைத்து ஊட்டச்சத்து உணவு அளிக்க வேண்டியிருந்தது. அதையடுத்து, மாநராட்சி நிர்வாகம் மாநகர பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து சென்று, பனமரத்துப்பட்டி ஏரி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட வனம் சார்ந்த பகுதியில் விட்டு வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் நாய் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநகர பகுதியில் மட்டும் 20 ஆயிரம் நாய்களுக்கு மேல் உள்ளன. அதில் ஆண் நாய்களுக்கு, “வாஸக்டமி‘ அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தினமும் 10 நாய்களுக்கு அஸ்தம்பட்டி வன உயிரியல் பாதுகாப்பு மையத்தில், “வாஸக்டமி‘ ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. நாய்களுக்கான, “சீஸன்‘ துவங்கியுள்ளதால், பிறப்பு விகிதம் கட்டுப்படுத்த மாநகராட்சி திடீரென களம் இறங்கியுள்ளது.