தினமலர் 28.07.2010
விதி மீறிய கட்டடத்திற்கு “சீல்‘
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயம் அருகில், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்திற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், “சீல்‘ வைத்து மூடியது.சென்னை மாநகராட்சியில் பெற்ற திட்ட அனுமதியை மீறி, வணிக கட்டடம் கட்ட முயன்றதை கண்டுபிடித்த சி.எம்.டி.ஏ., இந்த சீல் நடவடிக்கையை நேற்று எடுத்தது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., உறுப்பினர்–செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பெருநகரில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை கட்டுப்படுத்தும் முகமாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வானவில் அருகில் நில அளவை எண் 1433/3, பிளாக் 29, மயிலாப்பூர் கிராமம், சென்னை-18ல் கட்டப்பட்ட பழைய கதவு எண் 286, புதிய கதவு எண் 409 கொண்ட கட்டடம், நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971ன் பிரிவு 56 மற்றும் 57ன் படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.மாநகராட்சியிடம், திட்ட அனுமதி பெற்றதற்கு புறம்பாக, தரைதளம் மற்றும் நான்கு தளம் கொண்ட வணிக கட்டடத்தை கட்டியுள்ளார். இதனால், இந்தக் கட்டடம் பூட்டி சீல் வைக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.