“வறட்சியைப் போக்க ரூ. 47 கோடியில் பணிகள்’
கரூர் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க ரூ. 47 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.
கரூர் ஆட்சியரகத்தில் கோடையில் நிலவும் வறட்சியைப் போக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் கூறியது:
கரூர் மாவட்டத்தில உள்ள 2 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 21 கோடியில் 627 ஆழ்குழாய்கள், 388 மினி பவர் பம்புகள், 423 இதர பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் வறட்சியைப் போக்க, போர்க்கால அடிப்படையில் ரூ. 26 கோடியில் 374 அடிகுழாய்களும், 396 மினிபவர் பம்புகளும், 703 இதர பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டி.ஜி. வினய், எம்எல்ஏ பாப்பாசுந்தரம், மாவட்ட ஊராட்சித் தலைவர் கீதாமணிவண்ணன், நகராட்சிப் பொறியாளர் புண்ணியமூர்த்தி, கோட்டாட்சியர் நெல்லைவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.