தினமலர் 06.08.2010
“ரிப்பன் கட்டடம் புனரமைப்பு அடுத்த ஆண்டில் முடியும்’
சென்னை “”ரிப்பன் கட்டடம் புனரமைக்கும் பணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடியும்,” என மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் செயல்படும் ரிப்பன் கட்டடம் கலைநயமும், தொன்மையும் மாறாமல், ஏழு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை பார்வையிட்டு கூறியதாவது:ரிப்பன் கட்டடத்தின் 20 சதவீத அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.அடுத்தாண்டு மார்ச் மாதம் ரிப்பன் கட்டடம் புனரமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்படும். ரிப்பன் கட்டடத்தின் தரை தளத்தில், சென்னையின் பழங்கால வரலாறுகளை விளக்கும் வகையில் நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேயர், கமிஷனர் அலுவலகங்கள், மன்றக்கூடம் மற்றும் துறைத் தலைவர்கள் அலுவலகங்கள் மட்டும் ரிப்பன் கட்டடத்தில் செயல்படும். மாநகராட்சியின் நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் 21 கோடி ரூபாய் செலவில், ரிப்பன் கட்டடம் பின்புறம் புதிதாக கட்டப்படும்; ஆறு மாடி கட்டடத்தில் செயல்படும். இவ்வாறு மேயர் கூறினார்.