தினமணி 25.08.2009

முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை வடக்கு கூவம் ஆறு, நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளில் அள்ளப்படாத குப்பைகள், தெருக்களில் ஓடும் கழிவு நீர் ஆகிய சுகாதார சீர்கேடுகள் குறித்த செய்தி “தினமணி’யில் திங்கள்கிழமை வெளியானது.
இச்செய்தியைத் தொடர்ந்து சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று சுகாதார சீர்கேடுகளை ஆய்வு செய்தனர்.
சென்னை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் அங்கு ஏற்பட்ட கழிவு நீர் அடைப்புகளை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.
தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் நீல் மெட்டல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கொசு மருந்து தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் அடிப்பது போன்ற பணிகள் நடைபெற்றதோடு, 2 மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
தெருக்களில் கிடந்த கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டன. நெடுஞ்செழியன் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றி, ரூ.5.76 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்க மேயர் உடனடியாக உத்தரவிட்டார்.
மேலும் பல நாட்களாக குப்பைகள் தேங்கிக் கிடந்ததற்காக, நீல் மெட்டல் நிறுவன ஊழியர்களிடம் அதிருப்தி தெரிவித்த மேயர் சுப்பிரமணியன், அந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலரிடம், குப்பை அள்ளும் பணிகளை நாள்தோறும் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
“தினமணி’ செய்தியைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த உடனடி நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எனினும் குப்பைகளை அள்ளுவதும், கழிவு நீர் அடைப்புகளை சரி செய்வதும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.