தினமலர் 06.08.2010
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு “தண்ணி‘ காட்டும் உள்ளாட்சிகள்
உடுமலை : உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. இதனால், குடிநீர் திட் டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது கேள்விக்குறியாகி வருகிறது.குடிநீர் வடிகால் வாரியம் மூலம், உடுமலை பகுதியில் கணக்கம்பாளையம், மானுப்பட்டி– ஜோதிபாளையம், பூலாங்கிணர் , கண்ணாடிபுத்தூர், தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 145 கிராமங்கள் பயன்பெறுகின்றன. தினமும் இத்திட்டத்தின் கீழ் 77 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டத் தின் கீழ், 39 கிராமங்கள் பயன்பெறுகின்றன. 22 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மானுப்பட்டி– ஜோதிபாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மடத்துக்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 22 கிராமங்கள் மற்றும் ஒரு பேரூராட்சி பயன்பெறுகின்றன. தினமும் 38 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன.
தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், 26 கிராமங்கள் பயன்பெறுகின்றன. தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரும் இந்த குடிநீர் திட்டங்களுக்கு உரிய தொகையை அந்தந்த உள்ளாட்சி நிர் வாகங்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 4.5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது : குடிநீர் வடிகால் வாரியம், ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்ய 14 ரூபாய் வரை செலவிடுகிறது. இதில், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து ஆயிரம் லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இத்தொகையையும் கட்டாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனப்போக்கை கடை பிடிக்கின்றன.
குடிநீர் திட்டங்களுக்கு மாதம் எட்டு லட்சம் ரூபாய் மின் கட்டணம், சுத்திகரிப்புக்கு தேவையான ரசாயன பொருட்கள், இயந்திர தேய்மானம், பராமரிப்பு, உதிரி பாகங்கள், ஆட்கள் கூலி என கூடுதல் செலவு ஏற்பட்டு வரும் நிலையில், அரசிடமிருந்து குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு கூட நிதி இல்லாதபோது, பராமரிப்புக்கு கூடுதல் நிதி கிடைக்காமல், திட்டங்கள் கேள்விக்குறியாகி வருகின்றன.மின் கட்டணம் மட்டும் தவறாமல் கட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் கட்டணம் செலுத்துவதில் மெத்தனப்போக்கை கடை பிடிக் கின்றன. தொகை கட்டாத ஊராட்சிகளில் குடிநீர் துண்டிப்பு செய்தால், பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்படும். இதே நிலை தொடர்ந்தால் குடிநீர் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும், என்றனர்.