தினமலர் 09.08.2010
கோபியில் நடைபாதை பூங்கா திறப்பு “வாக்கிங்‘ செல்வோரின் கனவு பலித்தது
கோபிசெட்டிபாளையம்: கோபியில் துளிர் இயக்கம் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் செலவில் நடைபாதை பூங்கா திறக்கப்பட்டது. வாக்கிங் செல்லும் கோபி நகர மக்களின் நீண்ட கால கனவு பலித்தது.ஈரோடு மாவட்டத்தில் வருவாய் கோட்ட தலைமையிடமாக உள்ள கோபியில், நகராட்சி தரப்பில் பார்க் வசதி இருந்தும், “வாக்கிங்‘ செல்ல முடியாத அளவுக்கு சிதலடமடைந்துள்ளது. கோபி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஈரோடு, அந்தியூர் மற்றும் சத்தி சாலையில் “வாக்கிங்‘ சென்று வருகின்றனர். வாகனங்களின் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களால் எளிதாக “வாக்கிங்‘ செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள், பெரும் அவதிப்பட்டனர்.
கோபி நகர மக்களின் குறையை தீர்க்க துளிர் இயக்கம் சார்பில், சத்தி சாலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில், நடைபாதை அமைக்க கோபி நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. நகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக நடைபாதை பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து துளிர் இயக்கத்தின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் நடைபாதை அமைக்க பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. துளிர் இயக்கம் சார்பில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்தது.
புதிய நடைபாதை பூங்கா திறப்பு விழா துளிர் இயக்க தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. நடைபாதை பூங்காவை கோபி நகராட்சி தலைவர் ரேவதி தேவி திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, கோபி தாசில்தார் சந்திரசேகரன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் தனபால், துளிர் இயக்க துணைத் தலைவர் வெங்கடேஸ்வரன், செயலாளர் தாமஸ் ஜான், இணைச்செயலாளர் நல்லசாமி, பொருளாளர் ராமநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் நூர்ஜகான், நாகராஜன், சீனிவாசன், பிரகாசம், மாரிமுத்து, சாமிநாதன், திலீப், காஜான், துரைசாமி, மகேஸ்வரி உள்பட கலந்து கொண்டனர்.