“குப்பையில் இருந்து மின்சாரம்: ரூ. 55 கோடியில் திட்டம்’
திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ. 55 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளதாக மேயர் விஜிலா சத்தியானந்த் புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
மாநகராட்சிப் பகுதியில் தினமும் 150 டன் குப்பை சேருகிறது. இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ. 55 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் இத் திட்டத்தின் மூலம் 5 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். இத் திட்டத்துக்காக ராமையன்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் 5 சென்ட் நிலம் வழங்கப்படும்.
மேலும் காய்கனிக் கழிவுகள் போன்றவற்றில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் ரூ. 1 கோடியில்
செயல்படுத்தப்படவுள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் 750 தெருவிளக்குகள் வரை எரிய வைக்க முடியும்.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள சோடியம் விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளையும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 6 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளன. மாநகராட்சி இப்போது மாதம் ரூ. 60 லட்சம் மின் கட்டணமாக செலுத்தி வருகிறது. மேலும் மாதாந்திர பராமரிப்புச் செலவு ரூ. 12 லட்சம் ஆகும். மின் விளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும்போது மின் கட்டணத்தில் 30 முதல் 40 சதவீதம் குறையும்.
மாநகராட்சிப் பகுதியில் 2-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக தனியார் கலந்தாலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த வாரத்துக்குள் இறுதித் திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையரிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இத் திட்டத்துக்கு ரூ. 460 கோடி தேவைப்படும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந் நிதியைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இதில் 20 சதவீத நிதியை அரசிடம் இருந்து கேட்க முடிவு செய்துள்ளோம். தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தில் இருந்தும் நிதி கோரியுள்ளோம். ரூ. 60 கோடி வரை அத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் மேயர்.