நான்கு வணிக வளாகங்களுக்கு “சீல்’ இதுவரை சிக்கியது 56 கட்டடங்கள்
கோவை:விதிமீறி கட்டப்பட்ட நான்கு வணிக வளாகங்களுக்கு, மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நேற்று “சீல்’ வைத்தனர்.கோவையில் கடந்த 25ம் தேதி தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் விதிமீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களுக்கு “சீல்’ வைக்கப்படுகிறது.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் இணைந்து, நேற்று முன்தினம் வரையிலும் 52 வணிக வளாகங்களுக்கு “சீல்’ வைத்திருந்தனர். நேற்று மதியம் மீண்டும் “சீல்’ வைக்கும் பணி துவங்கியது.”சீல்’ வைக்கப்பட்ட வணிக வளாகங்கள் விபரம்:
* மசக்காளிபாளையம் ரோடு, லட்சுமிபுரம் சந்திப்பில், பீளமேடு பி.ஆர்.புரம் சாஸ்திரி வீதியை சேர்ந்த உமாபதி என்பவர், தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, மூன்று தளங்கள் (7500 சதுர அடி) விதிமீறி கட்டியிருந்தார். அக்கட்டத்திற்கு அதிகாரிகள் நேற்று “சீல்’ வைத்தனர்.* சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில், அதே பகுதியை சேர்ந்த அகிலாண்டம் என்பவர், தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, விதிமுறையை மீறி மூன்று தளங்களுடன் (10 ஆயிரம் சதுர அடி) வணிக வளாகம் கட்டியிருந்தார். அக்கட்டடத்திற்கு அதிகாரிகள் “சீல்’ வைத்தனர்.* திருச்சி ரோடு ராமநாதபுரத்தில், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, அனுமதியை மீறி இரண்டு தளம் (நான்காயிரம் சதுர அடி) கட்டிய கட்டடம்.* திருச்சி ரோடு ராமநாதபுரத்தில், அதே பகுதியை சேர்ந்த மாணிக்கவள்ளி, தரை மற்றும் முதல் தளத்திற்கு அனுமதி பெற்று, அனுமதிக்கு முரணாக மூன்று தளங்கள் (மூவாயிரம் சதுர அடி) கட்டியிருந்தார். அக்கட்டடத்திற்கு அதிகாரிகள் “சீல்’ வைத்தனர்.