தினமணி 13.08.2010
“ஆக்கிரமிப்பு குடிசைகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்’
காரைக்கால், ஆக 12 : காரைக்காலில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்ட குடிசைகள் முன்னறிவிப்பின்றி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல்ரொசாரியோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
காரைக்காலில் இலவச மனைப்பட்டா ஏழைகளுக்கு தரப்படவில்லை, இடத்துக்கான உரிம நகலைத் தந்துவிட்டு, தற்போது வரையில் இடத்தை வருவாய்த் துறையினர் காட்டவில்லையென்ற புகார் நிலவுகிறது.
இதையடுத்து, அரசு நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நில ஆர்ஜிதம் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக அரசு தரப்பினர் பதில் தெரிவித்து, படிப்படியாக பட்டா தரப்படுமென தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த மாதம் காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியில் சில குடும்பத்தினர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் போட்டனர். இது குறித்து வருவாய்த்துறையினர், போலீஸôர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லையென புகார்கள எழுந்தன.
இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல்ரொசாரியோ வியாழக்கிழமை கூறியது:
காரைக்காலில் குறிப்பாக, காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியில்தான் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உரிய இடம் தருவதாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் உடன்படவில்லை. சட்டத்துக்கு புறம்பான செயல் என்பதால், முன்னறிவிப்பின்றி அவற்றை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது எப்போது என்பதை உறுதியாக தற்போது சொல்ல இயலாது என்றார் துணை ஆட்சியர்.