தினமலர் 19.08.2010
ஒரு மாதத்தில் காமராஜ் ரோட்டில் சாலை விரிவாக்க பணி : நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் “உறுதி‘
திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜ் ரோட்டில் இருந்த மாநகராட்சி கடைகள் இடிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகி விட்டன. மின் கம்பங்களை இடம் மாற்றி அமைப்பதும், சாலையை விரிவாக்கம் செய்யும் பணியும் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரித்த போது, “காமராஜ் ரோட்டில் சாலை விரிவாக்க பணி இன்னும் ஒரு மாதத்தில் துவங்கும்‘ என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் “நம்பிக்கை‘யுடன் தெரிவித்தனர்.
திருப்பூர் காமராஜ் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து, விநாயகர் கோவில் வரை, மாநகராட்சிக்கு சொந்தமாக 33 கடைகள் இருந்தன. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவ்விடத்தில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டி, வருவாய் ஈட்டி வந்தது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, ரோட்டோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அகற்றியது.
அப்போது, ரோட்டை அகலப் படுத்தவும் முடிவு செய்தது. இதற்காக, மாநகராட்சி வசமிருந்த 33 கடைகளை அகற்றிக் கொடுக்க, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 14ம் தேதி, அக்கடைகள் இடிக்கப்பட்டன.
ஐந்து மாதங்களாகியும், காமராஜ் ரோடு அகலப்படுத்தும் பணி இன்னும் துவங்க வில்லை. ரோட்டுக்கு நடுவில் மின் கம் பங்கள் இருப்பதால், போக்குவரத்து நெரிச லின்றி வாகனங்கள் செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது. தற்போது, பிளாட்பார வியாபாரி களின் ஆதிக்கம் ஆரம்பித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, வேறு இடத்தில் வைக்க, மின் வாரியத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை சார் பில் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு தொகை வழங்க வேண்டி யுள்ளது. இதற்கான ஒப்புதல் கேட்டு, அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அரசு ஒப்புதல் அளித்த பின்பே, கடைகள் இடிக்கப்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட உள்ளன.
மேலும், மாநகராட்சி வசமிருந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை எடுத்துக் கொள்ளவும், அங்கு சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளவும் அனுமதி கேட்டும் அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இதற்கும் அரசின் ஒப்புதல் வந்த பின்பே, டெண்டர் அறிவித்து சாலை விரிவாக்க பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “காமராஜ் ரோட்டில், மாநகராட்சி கடைகள் இடிக்கப்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நிதி ஒதுக்கீடு செய்ய, அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.
வந்ததும், மின்வாரியத்துக்கான நிதி செலுத்தப்பட்டு, மின் கம்பங்கள் ரோட்டோர பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும். சாலை விரிவாக்க பணி குறித்து அரசின் ஒப்புதலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; ஒரு மாதத்துக்குள் அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும், முறைப்படி டெண்டர் அறிவித்து சாலை விரிவாக்க பணி துவங்கும்,’ என்றனர்.