தினமணி 28.08.2009
முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டம் கோவை மருத்துவமனையில் “சிறப்பு இன்சூரன்ஸ் வார்டு‘
கோவை, ஆக. 27: முதல்வரின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கோவை அரசு மருத்துவமனையில் “சிறப்பு இன்சூரன்ஸ் வார்டு‘ அமைக்கப்பட உள்ளது.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்துக்காக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் சிறப்பு வார்டுகளில், ஒரு பகுதியை நவீனப்படுத்தி, “சிறப்பு இன்சூரன்ஸ் வார்டு‘ ஆக மாற்றப்படுகிறது.
கோவை மருத்துவமனை: கோவை அரசு மருத்துவமனையில் “சிறப்பு இன்சூரன்ஸ் வார்டு‘ அமைக்க ரூ.30 லட்சம் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 லட்சத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.
சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையில் இருந்து இத் தொகை கழிக்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் கூறியதாக மருத்துவமனை டீன் (பொ) குமரன் தெரிவித்தார்.
புதிய கருவிகள் கிடைக்குமா? இலவச காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதயம், சிறுநீரக மாற்று, ஆஞ்சியோகிராம் மற்றும் பைபாஸ் அறுவைச்சிகிச்சைகளுக்குத் தேவையான கருவிகள் கோவை அரசு மருத்துவமனையில் இல்லை. இவற்றை வாங்க ரூ.4 கோடி, சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்கான கூடம், தேவையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி என மொத்தம் ரூ.5 கோடி தேவைப்படுகிறது.
இக் கருவிகள் வாங்குவதற்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
இக் கருவிகள் வந்தால்தான் இலவச காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவைச்சிகிச்சை செய்ய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறப்பு இன்சூரன்ஸ் வார்டு அமைக்கும் பணி ஓரிரு நாளில் துவங்கப்பட உள்ளது.