தினமலர் 19.08.2010
மாநகராட்சி குடிநீர் திட்டத்தில் “திருவெறும்பூர்‘ : அமைச்சர் உறுதி
திருச்சி: “”மாநகராட்சி செயல்படுத்தும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், செப்டம்பர் எட்டாம் தேதி திறந்து விடப்படும் 9 எம்.எல்.டி., தண்ணீர் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிக்கு வினியோகிக்கப்படும்,” என போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு உறுதியளித்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திருச்சி வீட்டுவசதி பிரிவு, நவல்பட்டு அண்ணா நகர் பகுதி 1, 2ல் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் விழா நவல்பட்டு பஞ்.,ல் நடந்தது.நவல்பட்டு பஞ்சாயத்துத் தலைவர் கயல்விழி வரவேற்றார். எம்.எல்.ஏ., சேகரன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் சாந்தகுமாரி, கவுன்சிலர் சித்ரவேல் முன்னிலை வகித்தனர்.
குடியிருப்பு வாசிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கி அமைச்சர் நேரு பேசியதாவது:கடந்த 28 ஆண்டு கால போராட்டத்தில் கடுமையான முயற்சிக்குப் பின் தீர்வு காணப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டவுடன், உடனடியாக முதல்வர், வருவாய்த் துறை அமைச்சரிடம் பேசி இங்குள்ளவர்களுக்கும் உரிமைப் பத்திரம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இப்பணியை தான் செய்ததாக வேறு சிலர் கூறுவது முறையா? என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.வீட்டு உரிமைப் பத்திரம் பெறுவதுக்கு தொகையுடன் வட்டியும் செலுத்த கூறப்பட்டது. வட்டியை தள்ளுபடி செய்ய முதல்வரிடம் பேசி நல்ல தீர்வு பெறப்படும். அதற்கு முன்னதாக தாமதிக்காமல் தொகையை செலுத்த வேண்டும். வட்டி தள்ளுபடி செய்யும் வரை தொகையை செலுத்தாமலிருப்பதை தவிர்க்க வேண்டும்.அண்ணாநகர் பகுதி 3 விரிவாக்கத்துக்கு முறையாக வசதிகள் இல்லை என கூறப்பட்டது. அந்த பகுதி பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்பட்டதும், அனைத்து வசதியும் செய்து தரப்படும். திருச்சி மாநகராட்சியில் 169 கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில், முதல் கட்டமாக 9 எம்.எல்.டி., நீர் வினியோகத்தை செப்டம்பர் எட்டாம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார். அந்த நீர் முழுவதும் திருவெறும்பூர் பகுதிக்குத் தான் வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.அதோடு, திருச்சி மாநகராட்சி எல்லை விரிவாக்கப் பணி நடக்கிறது. திருவெறும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி விரைவில் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்படும். அதன்பின், நபருக்கு நாளொன்றுக்கு 110லிட்டர் வீதம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.திருச்சியில் முன்மாதிரியாக ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டு, நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் 1,000 கோடி ரூபாய் திட்டத்தை முதல்வர் அளித்துள்ளார்.இவ்வாறு நேரு பேசினார்.