தினமணி 08.09.2010
“ஒட்டன்சத்திரம் – நாகணம்பட்டி புறவழிச்சாலை ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்’
ஒட்டன்சத்திரம், செப். 7: ஒட்டன்சத்திரம் பேரூராட்சி பொது நிதி மூலம் ஒட்டன்சத்திரம் – நாகணம்பட்டி புறவழிச்சாலை சுமார் ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும் என்று அரசு தலைமைக் கொறடா அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் பேரூராட்சி நாகணம்பட்டி ஆர்.எஸ்.பி. நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை இயங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் இரா.சோதீசுவரன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் திருமலைசாமி வரவேற்றார்.
தெரு விளக்குகளை இயங்கி வைத்து அரசு தலைமைக் கொறடா பேசியதாவது:
ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நாகணம்பட்டியில் நில எடுப்பு சட்டத்தின் கீழ் 4 ஏக்கர் 32 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2000-ம் ஆண்டு 115 ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நில உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. முடிவில் 2010-ம் ஆண்டு 2-வது மாதத்தில் நில எடுப்பு செல்லும் என்று, வீட்டுமனைப் பட்டாதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த நகரில் முதற்கட்டமாக புதிதாக 17 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு, இயக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்யப்படும்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் குடிநீர் வசதியும், தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 40 லட்சம் செலவில் சிமெண்ட் சாலையும் விரைவில் அமைக்கப்படும்.
மேலும் ஒட்டன்சத்திரம் – நாகணம்பட்டி புறவழிச்சாலை பேரூராட்சி பொது நிதியில் இருந்து சுமார் ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், உதவி மின் பொறியாளர் அய்யாக்குட்டி, பேரூர் அவைத்தலைவர் ஆனந்தன், பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் மகுடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்தன் நன்றி கூறினார்.