தினமணி 19.08.2010
“ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்தால் நடவடிக்கை’
பெரம்பலூர், ஆக. 18: பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் தெரிவித்தார்.
பெரம்பலூர் நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டது.
பெரம்பலூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலை ஓரங்களில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார், வருவாய்க் கோட்டாட்சியர் ச. பாலுசாமி, வட்டாட்சியர் கு. கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான பணியாளர்கள் நகராட்சிக்கு உள்பட்ட பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், அஞ்சல் அலுவலகப் பகுதி, கடைவீதி, திருச்சி பிரதான சாலை பகுதி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் கூறியது:
பெரம்பலூர் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நிரந்தர, தாற்காலிக ஆக்கிரமிப்புப் பகுதிகள் அகற்றப்படுகிறது.
இதேபோல, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை ஓரங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. மேலும், பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுப்பவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என்றார் அவர்.