தினமணி 25.09.2009
‘அண்ணா நூற்றாண்டு விழா: “காஞ்சிக்கு ரூ.6.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்‘
காஞ்சிபுரம்,செப்.24: காஞ்சிபுரம் நகராட்சியில் ரூ. 6.50 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ராவிடம் வியாழக்கிழமை ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவர் பிறந்து, வாழ்ந்த இடமான காஞ்சிபுரத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்தேன். நகராட்சியில் உத்தேசமாக ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
வளர்ச்சிப் பணிகளாக, காந்தி சாலை அழகுபடுத்தப்படும்; வரதராஜ பெருமாள் கோயிலில் நவீன சிமென்ட் தரை அமைக்கப்படும்; ரங்கசாமி குளம், சர்வ தீர்த்த குளம் ஆகியவை மேம்படுத்தப்படும்; எல்லப்ப நகர், கேஎம்பி நகர் பூங்காக்கள் மேம்படுத்தப்படும்; ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் மேம்படுத்தப்படும்.
மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.அவை முதல்வரிடம் எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.