தினமலர் 06.10.2010
தீபாவளிக்கு தரம் குறைந்த “ஸ்வீட்‘ தயாரிப்பு மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு அவசியம்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட விசேஷ தினங்களின் போது விற்பனை நோக்கத்துக்காக தரம் குறைந்த ஸ்வீட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரக்குறைவு குறித்து கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் தற்போதாவது கண்காணிப்பு பணி மேற்கொள்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.சேலம் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடுக்கு பஞ்சம் இருப்பதில்லை. மாம்பழ மண்டிகளில் பழங்களை, “கார்பைட்‘ கற்கள் மூலம் பழுக்க செய்வது, கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்வது, மளிகை பொருட்களில் கலப்படம், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை என்று சுகாதார சீர்கேடு தலை விரித்தாடுகிறது.
சமீபகாலமாக ஹோட்டல்களில் போட்டி மனப்பான்மை காரணமாக உடல் உபாதைக்குள்ளாகும் பொருட்கள் அதிகளவில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களின் போது ஸ்வீட் கடைகளில் வழக்கமான ஜாங்கிரி, லட்டு உள்ளிட்டவற்றுடன் பல புதிய ஸ்வீட் வகைகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும்.சேலம் மாநகர பகுதியில் பெரும்பாலான ஸ்வீட் கடைகளில் சுவையை அதிகரிக்க செய்ய உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய, “சாக்ரீன்‘ உள்ளிட்ட ரசாயன பொருட்களை கலப்படம் செய்து வருகின்றனர். தவிர, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட கார வகைகளை பழைய எண்ணெய்களில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய ஸ்வீட் விற்பனை குறித்து மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் கண்டு கொள்வதில்லை. தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. சேலம் மாநகர பகுதியில் உள்ள ஸ்வீட் கடைகளில், “ஸ்வீட்‘ தயாரிப்பு பணிக்கு மும்முரம் காட்டி வருகின்றனர்.
பெரியவர்களை காட்டிலும் ஸ்வீட்டை குழந்தைகள் தான் அதிகம் விரும்புவர். ஸ்வீட்டின் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாவர். பண்டிகை நேரத்தில் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஸ்வீட் கடை உரிமையாளர்களிடம் தரமான பொருட்களில் ஸ்வீட்களை தயார் செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்க வேண்டும்.தவிர, பண்டிகை நேரத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்வீட் கடைகளில் தரமான ஸ்வீட் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.மாநகர நல அலுவலர் பொற்கொடி கூறியதாவது:சேலம் மாநகரில் உள்ள ஸ்வீட் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும். அப்போது ஸ்வீட்டில் தரக்குறைவு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.