தினமலர் 26.10.2010
பேரூராட்சி செயல்பாடு: பள்ளி மாணவர்கள் “விசிட்‘
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் செயல்பாடுகளை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி “கிராம சபாவில் பஞ்சாயத்தின் பொறுப்புகள் மற்றும் மக்களின் அதிகாரங்கள்‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில், கிராம சபா மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களில் பொரு ளாதார, சமூக முன்னேற்றம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை அங்கப்பா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியர் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகளை அறிந்தனர்.
பேரூராட்சி தலைவர் சீனிவாசன் பேசியதாவது:
உள்ளாட்சி நிர்வாகங்களின் மக்கள் தொகையை பொறுத்து வார்டுகள் பிரிக்கப்படும். கிராம பஞ்சாயத்துகளில் நேரடியாகவும், பேரூராட்சியில் கவுன்சிலர்களும் தலைவர்களை தேர்வு செய்கின்றனர். பேரூராட்சியில் தலைவர், கவுன்சிலர்கள், செயல் அலுவலர், பொதுமக்களுடன் இணைந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. மாதம் ஒரு முறை உள்ளாட்சி நிர்வாகங்களின் கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் குறித்து திட்டமிடப்படும். இவ்வாறு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் பேசினார். பேரூராட்சியின் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல், வரி நிர்ணயம் செய்தல், ஆன்லைனில் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். இப்பணி முடிந்தவுடன் “கிராமப் புறங்களில் ஜனநாயகம்‘ என்ற தலைப்பில் மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டிகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் நடத்தி, அதில் சிறந்தவை தேர்வு செய்யப்படும். பள்ளி, மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும். சிறந்த கட்டுரைகள் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செய்திப்பத்திரிக்கையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.