தினமணி 04.11.2010
“வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை’
விருதுநகர், நவ. 3: விருதுநகர் நகராட்சியில் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் யானைக் கூட்டம் அணையில் நீர்வரத்து தொடங்கி உள்ளது.
கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து பெய்த மழையால், இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கி இருக்கிறது. யானைக்கூட்டம் அணைக்கும் நீர்வரத்து தொடங்கி இருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 4 மீட்டராக உள்ளது.
இந்நிலையில், அணையைப் பார்வையிட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மற்றும் நகராட்சித் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ், துணைத் தலைவர் காசிராஜன் உள்ளிட்டோர் சென்றனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யானைக் கூட்டம் அணை விருதுநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி இருந்தது.
தற்போது சில நாள்களாக மழை பெய்துவருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுவரையில், விருதுநகர் நகராட்சி மக்களின் குடிநீóர்த் தேவையை தாமிரபரணி கூட்டுக் குடிநீóர்த் திட்டம் மூலம்தான், இரு வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் நடைபெற்றது.
இந்த அணையில் இருந்தும், நகராட்சி மக்களுக்குத் தேவையான 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தினசரி எடுக்க முடியும். அடுத்த வாரம் முதல் வாரத்துக்கு ஒருநாள் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர். உடன் நகராட்சி ஆணையாளர் ஜான்சன், பொறியாளர் நாகராஜன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.