தினமணி 31.08.2009
“ஒசூர் புதிய பஸ் நிலையம் நவம்பரில் திறப்பு’
ஒசூர், ஆக. 30: ஒசூர் புதிய பஸ் நிலையம் நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி கூறினார்.
ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:
பஸ் நிலையத்தின் தரை மற்றும் முதல் தளங்களில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. தரைத் தளத்தில் 28 கடைகளும், முதல் தளத்தில் 48 கடைகளும், 2 உணவகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் புதிய பஸ் நிலையம் நவம்பர் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார். முன்னதாக ரூ.7 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், சென்னத்தூரில் ரூ.45 லட்சத்தில் கட்டப்படும் மின் மயானம், காமராஜ் காலனி நகராட்சி துவக்கப் பள்ளியில் ரூ.50 லட்சத்திலான வகுப்பறைக் கட்டடம், எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் புதிய நகராட்சி வளாகம் அமையும் இடம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், வட்டாட்சியர் முனிராஜ், நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா, துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், நகராட்சி ஆணையாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்